14/365 பொங்கல்
தமிழர் திருநாளாம் தை திங்கள் இன்று, உலகெங்கிலும் உள்ள தமிழர் அனைவரும் பொங்கல் வைத்து, உழவர்க்கு நன்றி சொல்லும் நாள். தமிழகத்தில் மூன்று நாட்கள் கோலாகலம்தான்.. எனக்கு சிறு வயதில் நாங்கள் கொண்டாடிய பண்டிகை நினைவிருக்கிறது.. பொங்கலுக்கு ஒரு மாதம் முன்பே எதிர்பார்ப்பு துவங்கி விடும்... அப்பொழுது தொலைக்காட்சி இல்லை.. தினமும் நாட்களை எண்ணி ஆவலுடன் பண்டிகை நாளை எதிர் நோக்கி இருப்போம்...
சில வருடம் பொங்கலுக்கு புது துணி உடுத்தியதும் உண்டு... கரும்பு ஒரு முக்கிய காரணமும்.. வீட்டில் செய்யும் பலகாரமும்.. பலகாரத்தை காட்டிலும் சுவை அதை செய்ய நடக்கும் ஏற்படும், அமளியும் துமளியும்... அதிரசம், முறுக்கு என வகை பலப்படும்... பொங்கலுக்கு முந்தைய இரவு போடும் கோலம்... காலையில் வீடு வாசலில் அடுப்பு வைத்து, பொங்கல் பானை வைத்து அதை சுற்றி மஞ்சள் கட்டி பால் பொங்கும் பொது இடும் குலவை.. எங்க வீட்ல பொங்கிருச்சு, உங்க வீட்ல என பக்கத்துக்கு வீடு தோழர் தோழிகளிடம் குசலம் விசாரித்தால்...
அந்த நாள் பூரம் சொந்தகாரங்க வீட்டுக்கு போய் பலகாரத்தை பங்கு வைத்தல், அப்புறம் ராத்திரிக்கு அன்னிக்கு வாய்த்த சாம்பாரையும், காய்களையும் போட்டு சுண்ட வைத்த சுண்டக்கறி, பொங்கச்சோருடனும், தோசையுடனும் அருமையாய் செல்லும்... அடுத்த இரண்டு நாட்களுமே கோலாகலம் தொடரும்....
இப்போவோ, காஸ் அடுப்பில் பொங்கல் வைத்து, வீட்டுக்குள்ளயே சாப்பிட்டு, தொலைக்காட்சி காட்டும் படத்தை பார்த்து முடித்ததும் முடிந்து விடுகிறது பொங்கல்.
Comments