ஒரு மழை மாலை...


ஒரு மழை மாலை...

அன்றொருநாள்....

அந்த ஆளுயர ப்ரெஞ்ச் ஜன்னலின் அருகே இருந்த குறுகிய மேஜையின் முன்புறமுள்ள ஒரே நாற்காலியில், இருமயிரிழைகளின் தூரம் அமர்ந்திருந்தோம் நாமிருவரும். ஜன்னலின் வழி வந்த காற்றின் ஒலி உன் முகம் தழுவி என் மீது படர்ந்து செல்கையில் அப்படி ஒரு பரவசம். உன் வலக்கையில் பிடித்திருந்த தேனீர் கோப்பையில் உன் இதழ்ரேகை பதிந்திருந்தது, அந்த கோப்பை புன்னகைப்பதை போலவே இருந்தது... தேனீரில் இனிப்பு இல்லை என சலித்துக்கொண்டாய்... உன் கைபிடித்து கோப்பையை இழுத்து நானும் அந்த தேனீரை அருகினேன்..உன் இதழ் பதிந்த இடத்தாலோ என்னவோ எனக்கு தேனீரின் தித்திப்பு அதிகமாவவே தோன்றியது.... அடித்த சாரலில் ஓரிரு துளிகள் காற்றுடன் கலந்து வந்துன் இடக்கன்னத்தில் அமர்ந்தது... உன் கன்னச்சருக்கில் வழிந்தோடிய அந்த துளியின் அசைவு கூசியதும் அதை உன் இடப்புற தோள் தொங்கும் துப்பட்டாவில் சாய்ந்து உன் இடக்கன்னம் உரசி நீ துடைத்தபோது உன் காதில் ஜம்மென்று ஆடிய ஜிமிக்கி என் கன்னமுரசிச்சென்றது... இப்பொழுதினில் உன் கையில் இருந்த கோப்பை சரிய தேனீர் உன் உடைதனில் சிந்தி உன்னை அபிஷேகம் செய்யும் பேறு பெற்றது..
.
நேற்று அதேபோலவொரு மழை மாலை பொழுது...

அந்த ஆளுயர ப்ரெஞ்ச் ஜன்னலின் அருகே இருந்த குறுகிய மேஜையின் முன்புறமுள்ள ஒரே நாற்காலியில், நான் மட்டும் தனியே அமர்ந்திருந்தேன்... முன்னே மேஜை மேல் தேனீர் கோப்பை. அடித்த சாரலில் ஓரிரு துளிகள் காற்றுடன் கலந்து வந்து தேனீர் கோப்பை மீது வந்தமர்ந்தன.... அவை அக்கோப்பையில் மேலிருந்து கீழ் வழுக்கி இழைந்தோடுவதை பார்க்கையில்... உன் இன்மை உணர்ந்தழுவதாகவே புலப்பட்டதெனக்கு!..எனக்குத்தான் பாவம் அழத்தெரியவில்லை!...

Comments

Anonymous said…
நல்லா இருக்கு. அவங்க ஊருக்குப் போயிட்டாங்களா.. அடுத்த மழை மாலையில வந்துருவாங்க, கவலைப் படாதிங்க :))

Popular Posts