விவசாயி
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற்(று) எல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்.
எனக்கு தெரிந்து வள்ளுவர் எழுதிய தவறான குறளில் இது தலையாயது... இந்த குறளின் கூற்றுப்படி உழவு செய்யும் விவசாயியின் பணியே தலை சிறந்ததாகும் மற்ற அனைவரும் அவரை தொழுது அவர் பின் செல்வரே. இன்றைய நிலையில் ஒரு விவசாயியின் மகன் தனது தந்தையின் தொழிலை ஏற்க முனைவதில்லை.... நம் அனைவருக்கும் கழனியில் இறங்கி பயிர் செய்யும் விவசாயியின் நிலைமையும், நிலமும் இன்று அவனுக்கு எந்த வகையிலும் உதவியாய் இல்லை என்பதே உண்மை!.
முப்போககும் விளைத்து, தன கழனியிலே வளர்ந்த நெற்கதிர்களை விற்று, தன் குடும்பத்தை மகிழ்ச்சியுடன் வைத்திருந்த விவசாயி புத்தகங்களிலும் புராண இதிகாசங்களிலும் மட்டுமே காட்சி தருகிறான். தற்போதய இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை மட்டும் பல லட்சங்களை தாண்டும். இந்த ஆண்டு தமிழகத்தில் மட்டுமே 10க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்!. இதை அரசும் ஆமோதிக்கிறது. நாம் சாப்பிடும் ஒவ்வொரு பருக்கையும் எவனோ ஒருவன் வியர்வை சிந்தி செதுக்கித்தருகிறான்.. என்றாவது ஒரு நாள் அவனையும் அவன் படும் அவலங்களையும் பற்றி நாம் நினைத்ததுண்டா?
சில நாட்கள் முன் ஒரு கிராமத்திருக்கு செல்ல நேரிட்டேன். அங்குள்ள விவசாயிகளை சந்தித்து அவர்களுடன்இணைந்து பணிபுரிய வேண்டி. அவர்களிடம் உள்ள பிரச்சனைகளை கூற ஆரமித்த பின் தோன்றியது, நாம் பணி புரியும் இடத்தில் நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் எல்லாம் ஒரு பிரச்சனையா?.. அவர்கள் கூறிய வார்த்தைகளில் ஒன்று மட்டும் புலப்பட்டது, நீங்களும் நானும் உண்ண வேண்டி எந்நிலையிலும் இவர்கள் தங்கள் கழனிகளில் நமக்காக பயிரிடுவர்.
உங்களுக்கும் எனக்கும் தெரிந்திராத ஒரு விடயம்.. ஒரு சிறு விவசாயி அரை முதல் ஒரு ஏக்கர் வரை நிலம் வைத்துள்ளாரேயானால், அதில் பயிர் செய்ய அவர் தோராயமாக 30000 ருபாய் வரை செலவு செய்கிறார்... இது, நற்றாங்கல் நட்டு, பயிர் செய்து அதன் விளைச்சலின் பின் அறுவடை செய்து அதை கொள்முதல் செய்பவரிடம் கொண்டு சேர்க்கும் வரையிலான செலவு ஆகும்... இதனிடையே மழை வந்தால் மேலும் 4000 முதல் 5000 செலவு செய்ய நேரிடும் . இவை அனைத்தும் ஒரு விவசாயி 90 முதல் 100 நாட்களில் செய்து முடிக்கிறான்... பண ரீதியாக அவனுக்கு ஆகும் செலவு இதுவெனில், இன்னும் பிற பிரச்சனைகளும் உள்ளன... இன்றைய விவசாய சூழலில் விவசாய நிலத்தில் வேலை செய்ய கிடைக்கும் தொழிலாளர்கள் மிகக்குறைவு... உழுவதற்கான மாடுகள் மிக மிக குறைவு... உழுவதற்கு ட்ராக்டர் வைத்தே ஆக வேண்டும்... தொழிலாளர்கள் கூலி அதிகம் கேட்டால் கொடுத்துதான் ஆக வேண்டும்... அல்லது அவர்களுக்கு அதிக கூலி பெற்றுத்தரும் கட்டிட வேலை பாக்கி உள்ளது... இன்னும் களை எடுத்தல், எலி மற்றும் மற்றவைகளிடம் இருந்து பயிரை பாதுகாத்து நமக்கு எடுத்து வந்து சேர்த்த பின் அவனுக்கு கிடைக்கும் "நெட் ப்ராபிட்" என நாம் சொல்லும் லாபம் 6000 முதல் 8000 வரை... இது அவனது முழு 3 மாத சம்பளம் என கொள்ளலாம்...
இவ்வளவிற்கும் பிறகும் அவன் விவசாயம் விட்டு வேறு தொழில் செல்லாததிற்கு காரணங்கள் உண்டு.. அவனுக்கு மட்டுமே விளங்கும் அதை எழுத்துகளால் கூறலாகாது.. உங்களுக்கும், எனக்கும் ஏன் பல பொழுதுகளில் அவன் பெற்ற பிள்ளைகளுக்குமே அது விளங்குவதில்லை...
எங்களால் முடிந்த முயற்சியால் மகசூல் என்ற தொண்டு அமைப்பின் மூலம், இவ்வாறு சிறு விவயாசிகளுக்கு அவர்களின் லாபத்தை அதிகரிக்க சில எளிய விவசாய முறைகளை அவர்களிடம் பகிர்ந்தும், செய்தும் தருகிறோம்... ஒரு ஏக்கருக்கு 10 முதல் 20% வரை லாபத்தை அதிகரிக்க செய்தும், மேலும் அவர்களின் முதலீடை குறைக்கவும் செய்வதன் மூலம் வருவாய் இன்னும் சற்றே அதிகரிக்க செய்கிறோம்.
இன்னும் வேதனைக்குரிய விடயம் என்னவென்றால் அரசாங்கம் குறு நில விவசாயிகளுக்கு வழங்கும் மானியங்கள் குறித்த தகவல் பல விவசாயிகளுக்கு தெரிவதில்லை.. மேலும் "க்ராப் இன்சூரன்ஸ்" என்னும் பயிர் பாதுகாப்பு நிதி குறித்த விபரங்களும் அவர்களுக்கு தெரிவதில்லை... இது பற்றி கூறும் பொழுது அவர்கள் இதன் பயனை உணர்கிறார்கள்... இவை அனைத்தும் மேலும் ஒரு நம்பிக்கை மற்றும் உந்துதல் தருகிறது...
ஆனால் இவை மட்டும் போதுமானதா என்றால் இல்லை.... உங்களில் யாரேனும் உழவற்கு உதவும் முனைப்பு இருந்தால் அணுகவும்..... வள்ளுவன் வாக்கு பொய்யாவதை தவிர்க்கவேனும் பாடுபடுவோம்!
Comments